இன்னும் அதிக விமர்சனங்களை எதிர்பார்த்தேன்: ’பேட்மேன்’ நடிகர் பதில்

இன்னும் அதிக விமர்சனங்களை எதிர்பார்த்தேன்: ’பேட்மேன்’ நடிகர் பதில்
Updated on
1 min read

பேட்மேனாக நடிப்பது குறித்து இன்னும் அதிக விமர்சனங்களை எதிர்பார்த்ததாக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டு வெளியாகவுள்ள புதிய பேட்மேன் படத்தில், 'Twilight’ படங்களில் நாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்து வருகிறார்.

பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் பலரும் இவர் பேட்மேன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கமாட்டார் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து எதிர்மறைக் கருத்துகளை தெரிவித்து வந்தனர். ராபர்ட் பேட்டின்சனைக் கிண்டலடித்து மீம்களும் பகிரப்பட்டன.

இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராபர்ட் பேட்டின்சன் இது குறித்துக் கூறுகையில், ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் எதிர்பார்த்ததை விடக் குறைவான விமர்சனங்களே வருகின்றன. இது ஒருவகையில் நல்லதுதான். நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.

படப்பிடிப்பில் பேட்மேன் உடையை அணிந்தபோது புது மனிதனாக உணர்ந்தேன். இயக்குநரிடம் இது குறித்துக் கூறியபோது, 'அப்படித்தான் இருக்கும். ஏனென்றால் நீங்கள் அணிந்திருப்பது பேட்மேன் உடை' என்றார். உடனடியாக ஒருவித சக்தி எனக்குள் ஊடுருவியது போல இருந்தது'' என்று ராபர்ட் பேட்டின்சன் தெரிவித்துள்ளார்.

மேட் ரீவ்ஸ் இயக்கும் இந்தப் படம், 2021-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in