

ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தொடர்ந்து மார்வல் சினிமா உலகின் அடுத்தடுத்த படங்களில் தோன்றும் என்று தான் நம்புவதாக நடிகரும், இயக்குநருமான ஜான் ஃபேவரூ தெரிவித்துள்ளார்.
மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் மொத்த உரிமையை டிஸ்னி நிறுவனம் வாங்குவதற்கு முன்பே, அந்த காமிக்ஸின் ஒரு சில கதாபாத்திரங்களின் உரிமைகளை மற்ற ஸ்டூடியோக்கள் வாங்கியிருந்தன. அதில் முக்கியமான கதாபாத்திரம் ஸ்பைடர் மேன். ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்துக்கான உரிமை மொத்தமும் சோனி நிறுவனத்திடமே இருந்தது.
அந்த கதாபாத்திரத்தை வைத்து 6 திரைப்படங்களை சோனி இதுவரை தனியாகத் தயாரித்துள்ளது. மார்வல் சினிமா உலகம் தொடங்கிய பின்னரும் கூட பேச்சுவார்த்தை உடன்படாத காரணத்தால் அதில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை இணைக்கவில்லை. 2016-ல் வெளியான 'சிவில் வார்' திரைப்படத்திலிருந்து ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் மார்வல் சினிமா உலகில் இணைந்தது.
ஆனால் ஸ்பைடர்மேன் படங்களை சோனி நிறுவனமே தயாரிக்கும். அதில் 5 சதவீத வசூல் லாபம் மட்டும் டிஸ்னிக்குச் செல்லும். மேலும் ஸ்பைடர்மேன் தொடர்பான பொம்மைகள் உள்ளிட்ட வணிகப் பொருட்களின் மொத்த உரிமை மற்றும் லாபமும் டிஸ்னியிடமே இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
தொடர்ந்து, 'ஸ்பைடர் மேன் ஹோம்கமிங்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்', 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' ஆகிய திரைப்படங்கள் மார்வல் சினிமா உலகின் ஒரு பகுதியாக வெளிவந்தன. ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக சமீபத்திய 'ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம், இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் அதிக வசூல் பெற்று சாதனை படைத்தது.
இதனால் இனி வரும் ஸ்பைடர்மேன் படங்களை இணைந்து தயாரிக்கலாம், லாபத்தையும் சரி பாதி பிரித்துக் கொள்ளலாம் என டிஸ்னி தரப்பு புதிய ஒப்பந்தத்தை முன்வைக்க, சோனி நிறுவனம் அதை மறுத்துவிட்டது. டிஸ்னி கறாராக கேட்கவே, இனி ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் மார்வல் சினிமா உலகில் இருக்காது என சோனி நிறுவனம் அதிரடியாக அறிவித்தது.
தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அக்டோபர் மாதம் இதற்காகப் அமெரிக்காவில் பெரும் போராட்டம் நடத்தவும் சிலர் இணையத்தில் தனியாகப் பிரச்சாரம் செய்து ஆள் திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 'அயர்ன் மேன் 1' மற்றும் 2, 'ஜங்கிள் புக்', 'லயன்கிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநரும், மார்வல் சினிமா உலகில் ஹாப்பி ஹோகன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வரும் ஜான் ஃபேவரூ இது குறித்து பேசுகையில், "என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்தக் கதாபாத்திரங்களின் கடைசி பகுதியாக இது இருக்காது என நான் நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.