

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது அடுத்த படத்தின் டீஸரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக திடீரென வெளியிட்டுள்ளார்.
ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை 17, 2020 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உளவு பார்ப்பவர்களைப் பற்றிய அறிவியல் புனைவு கலந்த கதை என்று சொல்லப்படுகிறது. மேலும், கால நேரத்தை வைத்து நோலன் வழக்கமாகக் கையாளும் குழப்பும் விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு, ’ஹாப்ஸ் அண்ட் ஷா’ படத்தின் காட்சிக்காக வந்திருந்த சில ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென, ’டெனெட்’ படத்தின் டீஸர் திரையிடப்பட்டது. இந்த டீஸர் இன்னும் இணையத்தில் வெளியாகவில்லை.
ஜான் டேவிட் வாஷிங்டன் என்கிற கதாபாத்திரம் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த கண்ணாடியை பரிசோதிப்பது போல ஒரு காட்சி, அவர் பிராண வாயுவுக்கான மாஸ்க்கை அணிந்திருக்கும் காட்சி, ஸ்வாட் குழு ஆயுதங்களோடு ஓடும் காட்சி ஆகியவை இந்த டீஸரில் இடம்பெற்றுள்ளன.