

1994-ல் வெளியான 'தி லயன் கிங்' படத்தின் பின்னணியில் உழைத்த அந்தப் படத்தின் அனிமேட்டர்களில் ஒருவர், ரீமேக் செய்யப்பட்டுள்ள வடிவம் மலிவானது என்று விமர்சித்துள்ளார்.
கார்ட்டூன் படமான 'ஜங்கிள் புக்'கை மறு ஆக்கம் செய்து பெரும் வெற்றி கண்ட டிஸ்னி நிறுவனம், 'தி லயன் கிங்' படத்தையும் தத்ரூப அனிமேஷன் முறையில் எடுத்து ஜூலை 19 அன்று வெளியிட்டது. படம் மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்து வருகிறது.
அசல் 'லயன் கிங்' படத்தில் அனிமேட்டராக பணியாற்றிய டேவிட் ஸ்டீஃபன் என்பவர், ரீமேக் 'லயன் கிங்’ படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பணத்துக்காக மட்டுமே இப்படி ஒரு மறுஆக்கம் செய்யப்பட்டது தன்னை காயப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அசல் 'லயன் கிங்' படத்தில் பணியாற்றியவர்களிடம் இந்த ரீமேக் பற்றி கணக்கெடுப்பு எடுத்தால் பெரும்பாலானவர்கள் ஏன், இதை நிஜமாகவே செய்ய வேண்டுமா? என்றுதான் சொல்வார்கள். என்ன படம் எடுக்க வேண்டும் என்பதை முக்கியப் பங்குதாரர்கள் முடிவு செய்வது வருத்தமாக இருக்கிறது.
இதுவரை போட்டிருந்த முகத்திரையை எடுத்துவிட்டு, ஆம் எங்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று டிஸ்னி ஒப்புக்கொள்வதைப் போல இருக்கிறது. உண்மைத்தன்மை மற்றும் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் இத்தகைய நிலை, ஒரு கலைஞனாக எனக்கு ஏமாற்றம் தருகிறது.
டொனால்ட் க்ளோவர், பியோன்ஸே உள்ளிட்டவர்களின் குரல் நடிப்பு பலவீனமாக, உயிரற்றதாக இருந்தது. பழைய இயற்கை சார்ந்த படங்களில், உண்மையான விலங்குகளுக்கு மனிதர்கள் பின்னணிக் குரல் கொடுத்திருப்பர்கள். அதுபோல் டப்பிங் இருந்தது. மிகவும் மலிவாக இருக்கிறதே என்று நினைத்தேன். இந்த ரீமேக் இன்னும் கொஞ்சம் தாமதமாகியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்" என்று ஸ்டீஃபன் கூறியுள்ளார்.