

'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' (Spiderman Far From Home) திரைப்படத்தின் சர்வதேச வசூல் ஒரு பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. இதுவரை வந்த 'ஸ்பைடர்மேன்' படங்களில் முதல் முறையாக இந்த இலக்கைத் தாண்டிய பாகம் இதுதான்.
டிஸ்னியின் மார்வலும் - சோனி நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்தத் திரைப்படம் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. 2019-ல் மார்வல் தயாரிப்பில் வெளியான 'அவெஞச்ர்ஸ் எண்ட்கேம்', 'கேப்டன் மார்வல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படமும் தொடர்ச்சியாக ஒரு பில்லியன் டாலர் வசூலைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் வெளியான 'ஏஜ் ஆஃப் அல்ட்ரான்', 'ளாக் பேந்தர்', 'அயர்ன் மேன் 3', 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் 1' ஆகிய படங்கள் மார்வலுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான வசூலைத் தந்தன.
ஆனால், இந்த வசூல் முழுவதும் மார்வல், டிஸ்னி நிறுவனங்களுக்குப் போகாது. ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்துக்கான உரிமை சோனி நிறுவனத்திடமே உள்ளதால், அவர்களுக்கே பெருவாரியான பங்கு போய்ச் சேரும். 2012-ல் வெளியான 'ஸ்கைஃபால்' திரைப்படத்துக்குப் பிறகு சோனி நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர் வசூலைத் தாண்டியுள்ள படம் 'ஃபார் ஃப்ரம் ஹோம்' தான்.
அண்மையில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்', சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்து 'அவதார்' சாதனையை முறியடித்தது நினைவுகூரத்தக்கது.