

'லயன் கிங்' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 54.75 கோடி ரூபாயை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டிஸ்னியின் 1994 கார்டூன் அனிமேஷன் திரைப்படமான 'லயன் கிங்', தத்ரூப அனிமேஷன் உத்தி மூலம் மீண்டும் உருவாக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட முக்கிய மாநில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. மேலும் இந்தியில் ஷாரூக் கான், அவரது மகன், தமிழில் சித்தார், அரவிந்த்சாமி என அந்தந்த மொழிகளில் பிரபலமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் பின்னணிக் குரல் கொடுத்திருந்தனர்.
டிஸ்னியின் விளம்பரம் மற்றும் அந்தந்த மொழிக்கு ஏற்றாற்போல கொடுக்கப்பட்ட குரல்கள், வசனங்கள், இதனால் 'லயன் கிங்' மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. திரையரங்கில் மட்டுமே 3டியில் பார்த்து ரசிக்கக்கூடிய படம் என்பதாலும், குழந்தைகளுக்கான படம் என்பதாலும் பல குடும்பங்களைக் கவர்ந்துள்ளது. இது பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்துள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களில் ரூ.54.75 கோடியை 'லயன் கிங்' வசூலித்துள்ளது. சென்னையில் சில திரையரங்குகளில் பின்னிரவுக் காட்சிகள் திரையிடப்பட்டு அதுவும் அரங்கம் நிறைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வருடம் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் தான் இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம். குறிப்பாக முதல் மூன்று நாட்களில் மட்டும் அந்தப் படம் 158.65 கோடி ரூபாயை வசூலித்தது. இதுவும் டிஸ்னியின் தயாரிப்புதான் என்பது குறிப்பிடதக்கது.
சர்வதேச அளவில் 'லயன் கிங்' இதுவரை வசூலில் 531 மில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.