வசூலில் முதலிட சாதனை: 'அவெஞ்சர்ஸ்'க்கு வாழ்த்து சொன்ன ஜேம்ஸ் கேமரூன்

வசூலில் முதலிட சாதனை: 'அவெஞ்சர்ஸ்'க்கு வாழ்த்து சொன்ன ஜேம்ஸ் கேமரூன்
Updated on
1 min read

'அவதார்' திரைப்படத்தின் வசூலை முந்தி, திரைப்பட வரலாறில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' பெற்றுள்ளதற்கு 'அவதார்' படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'அவதார்' படத்தில் பண்டோரா கிரகத்தில் இருக்கும்  விட்டில் பூச்சிகள் போன்றவை, ஐயர்ன்மேன் உடம்பிலிருந்து பறப்பது போல ஒரு படத்தைப் பகிர்ந்துள்ள கேமரூன், அதனுடன், பண்டோரா கிரக மொழியான நாவியில், "Oel ngati kameie" என்று பகிர்ந்திருந்தார். இதற்கு 'நான் உன்னைப் பார்க்கிறேன்', 'உன்னை உணர்கிறேன்', 'புரிந்து கொள்கிறேன்' என்று பொருள்.

இது படத்தில் வரும் வசனம். மேலும் 'டைட்டானிக்' படத்திலும் நாயகன், நாயகியிடம் 'i see you' என்ற வசனத்தைப் பேசுவார். இதை வைத்தே தற்போது அவெஞ்சர்ஸுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் கேமரூன். மேலும், ''பாக்ஸ் ஆபிஸில் புதிய ராஜாவாக மாறியதற்கு வாழ்த்துகள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

திரைப்பட வரலாற்றில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை கடந்த 10 வருடங்களாக 'அவதார்' பெற்றிருந்தது. அதன் 2.78 பில்லியன் டாலர் என்ற வசூலை 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' முந்தியுள்ளது. இதுவரை 2.79 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது 'எண்ட்கேம்'. 

அவதாருக்கு முன்னால், ஜேம்ஸ் கேமரூனின் 'டைட்டானிக்' முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 'அவதார் 2'-ஆம் பாகம் எடுத்து வருகிறார் கேமரூன். எனவே எண்ட்கேம் சாதனையும் விரைவில் முறியடிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in