

'தார் 4' திரைப்படம் எடுக்கப்படவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாகத்தை இயக்கிய டாய்கா வைடிடி இந்தப் பாகத்தையும் இயக்கவுள்ளார்.
'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் முடியும்போது, தார் கதாபாத்திரம், 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' குழுவுடன், அவர்கள் விண் கப்பலில் கிளம்புவது போல இருக்கும். மேலும், தாரின் ஆஸ்கார்ட் கிரகம் அழிக்கப்பட்டுவிட்டதால், அந்தக் கிரக மக்கள் பூமியில் ஒரு பகுதியில் தங்கியிருப்பார்கள். தார், தன் தோழி வால்கரியிடம் மக்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைக் கொடுத்துவிட்டுச் செல்வார்.
அடுத்து தார் கதாபாத்திரம் 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' மூன்றாம் பாகத்தில் தோன்றுமா அல்லத்து 'தார் 4'-ம் பாகம் எடுக்கப்படுமா என்ற சந்தேகங்கள் இருந்தன. இந்த அறிவிப்பின் மூலம் அந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்துள்ளன. தார் முதல் இரண்டு பாகங்களை விட, மூன்றாவது பாகமான 'ராகனராக்'கில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் மீண்டும் இயக்குநர் வைடிடியே தாரை இயக்கினால் நன்றாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்துக்காக 'அகிரா' என்ற படத்தை இயக்க வைடிடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே, தார் கதாபாத்திரம் பிரதானமாக இல்லையென்றாலும், சிறிது நேரமாவது 'கார்டியன்ஸ்...' படத்தில் இடம் பெறும் என்ற நிலை உருவானது. 'அகிரா' தாமதமானதால் அதை இப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டு 'தார்' இயக்கத் தயாராகிவிட்டார் வைடிடி. க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் இதில் மீண்டும் தாராக நடிக்கிறார்.
'ப்ளாக் விடோ', 'ப்ளாக் பேந்தர் 2', 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2', 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3' என மார்வல் சினிமா உலகத்தின் 4-வது கட்டத்தில் என்னென்ன படங்கள் வரவுள்ளன என்பது சூசகமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் தார் 4-ம் இணைந்துள்ளது. படம் 2020-ல் வெளியாகும் என்று தெரிகிறது. படத்தைப் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.