

புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான 'அமெரிக்கன் ஐடல்' நிறைவு பெறுகிறது. வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியின் 15-வது பதிப்பே (சீஸன்) இறுதிப் பதிப்பாக இருக்கும் என ஃபாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
2002-ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியே, சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி. பிரிட்டைனில் ஒளிபரப்பாகி வந்த 'பாப் ஐடல்' என்ற நிகழ்ச்சியை ஒட்டி உருவான 'அமெரிக்கன் ஐடல்', இதுவரை 14 பதிப்புகளை கண்டுள்ளது.
தொலைக்காட்சி வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்று பெயர்பெற்ற அமெரிக்கன் ஐடல், பல இசைக் கலைஞர்களை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றுள்ளது. முதல் எட்டு வருடங்கள் டி.ஆர்.பி வரிசையில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தாலும், கடந்த சில வருடங்களாக அமெரிக்கன் ஐடலுக்கான பார்வையாளர்கள் குறைந்து வருவதே நிகழ்ச்சியின் நிறைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
சைமன் ஃபுல்லர் என்பவர் உருவாக்கிய இந்நிகழ்ச்சியில் பல முன்னணி பாப் இசைக் கலைஞர்கள் நடுவர்களாக இருந்துள்ளனர். வரப்போகும் இறுதிப் பதிப்பில், பாடகி ஜெனிஃபர் லோபஸ், பாடகர் கீத் அர்பன் உள்ளிட்டோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.