

பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் அர்னால்ட் சுவார்சனேகர் தான் சமூக வலைதளங்களின் ரசிகன் என்றும், ரசிகர்களுடன் செல்ஃபி படங்கள் எடுப்பது மிகவும் பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அர்னால்ட் நடிப்பில் வெளியான 'மேகி' என்ற படத்தின் திரையிடலைத் தொடர்ந்து, அர்னால்டுடன் ரசிகர்கள் செல்ஃபி படங்கள் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது குறித்து பேசிய அர்னால்ட், "என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாது என நினைத்தவர்கள் எல்லாம் அன்று எடுத்துக் கொண்டனர். சமூக வலை தளங்களில் எனக்கு அருமையாக நேரம் கழிகிறது. சிலருக்கு அவை பிடித்துள்ளன, சிலருக்கு பிடித்திருக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.
எனது பதிவுகளைப் பற்றி என் பிள்ளைகள் எதுவும் கூறுவதில்லை. அவர்களுக்கு அதில் எந்த தர்மசங்கடமும் இல்லை. அதுவும் இந்த வயதில் (67) நான் சமூக வலைதளத்தில் இருப்பதைக் கண்டு பலருக்கும் நம்பிக்கை வந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தைக் பயன்படுத்துவதில் எனக்கு பெரிய நிபுணத்துவம் இல்லை. அதனால், நானே இதை செய்யும்போது, தங்களால் ஏன் முடியாது என என் வயதில் இருப்பவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்" என்றார்.