

பிரபல ஹாலிவுட் நடசத்திரம் சில்வஸ்டர் ஸ்டலோனும், பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானும் ட்விட்டரில் பரஸ்பரம் நட்பு பாராட்டியது ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விரைவில் நாம் இணைந்து ஒரு படத்தில் நடிப்போம் என ஸ்டலோன் சல்மானிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கான், சில்வஸ்டர் ஸ்டலோனின் ராக்கி, ராம்போ உள்ளிட்ட படங்களை தான் பார்த்துள்ளதாகவும், அதை உந்துதலாகக் கொண்டே இன்றுவரை தினமும் உடற்பயிற்சி செய்வதாகவும் ட்விட்டரில் ஸ்டாலோனை குறிப்பிட்டு பதிவிட்டார்.
தொடர்ந்து "நன்றி நண்பா. உனக்கு பெரிய மனது. பெரிய திறமை. பெரிய எதிர்காலம் இருக்கிறது. உனது நண்பன் சில்வஸ்டர் ஸ்டலோன்" என அவர் பதிலளிக்க, இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்ட ஆரம்பித்தனர். தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஸ்டலோன், "சல்மான், உனது ரசிகர் கூட்டம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒரு வெற்றிகரமான ஆக்ஷன் படம் எடுக்க, அருமையான ரசிகர் கூட்டம் தேவை. விரைவில் நாம் ஒரு ஆக்ஷன் படத்தில் இணைவோம். ஒரு வேளை அடுத்த எக்ஸ்பேன்டபிள்ஸ் படத்தில்?" என பதிவேற்றியுள்ளார்.
நீங்கள் ஹீரோக்களின் ஹீரோ என சல்மானும் இதற்கு பதில் தெரிவித்துள்ளார். சல்மான் - ஸ்டாலோனின் திடீர் நட்பு பாராட்டல் பாலிவுட்டில் பலரை பரபரபடையச் செய்துள்ளது. விரைவில் இருவரும் இணைவார்கள் என்று சல்மான் ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.