

ஹாலிவுட் நடிகர் ஹாரிஸன் ஃபோர்ட் விமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார்.
72 வயதான நடிகர் ஹாரிஸன் ஃபோர்ட், 'இண்டியானா ஜோன்ஸ்', 'ஸ்டார் வார்ஸ்' படங்களின் நாயகனாக புகழ்பெற்றவர். ஃபோர்ட் 1942-ஆம் ஆண்டு மாடல் விமானம் ஒன்றை வைத்துள்ளார். வியாழக்கிழமை இந்த விமானத்தை அவர் ஓட்டிச் சென்றபோது, விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. விமானத்தை வீடுகளில் இடித்து விடாமல் தரையிறக்க முயற்சித்து, பக்கத்திலிருக்கும் கோல்ஃப் மைதானத்தில் ஃபோர்ட் தரையிறக்கியுள்ளார்.
கோல்ஃப் விளையாட வந்தவர்கள் ஹாரிஸன் ஃபோர்டை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஃபோர்டுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு பாதிப்பு இல்லை எனத் தெரிகிறது.
3,000 அடியில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் என்ஜின்கள் செயலிழந்ததாகவும், தரையிறங்கும் போது ஒரு மரத்தில் மோதி இறங்கியதாகவும், இதில் நெற்றியில் வெட்டுப்பட்டதோடு, ஃபோர்டின் காலும் உடைபட்டதாகத் தெரியவந்துள்ளது.
சான்டா மோனிகா விமான சங்கத்தைச் சேர்ந்த க்ரிஸ்டியன் ஃப்ரை இந்த விபத்து குறித்து பேசும்போது, "ஒரு திறமையான பைலட்டால் அவசர நேரங்களில் தரையிறக்கப்பட்ட விமானம் போல இருக்கிறது. ஹாரிஸன் ஃபோர்ட் சூழலை திறமையாகக் கையாண்டுள்ளார்" என்றார்.