

அடுத்த வருடம் வெளியாகவுள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் லண்டனில் இன்று அறிவிக்கப்பட்டது. 'ஸ்பெக்டர்' என இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் தொடர்ந்து ஹிட்டடித்து, தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களைக் கொண்டிருக்கும் கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது கதைகள் திரைப்படங்களாக மாற்றப்பட்டுவருகின்றன.
2012-ம் ஆண்டு வெளியான 23-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'ஸ்கைஃபால், பாண்ட் திரைப்படங்களிலேயே முதன்முறையாக ஒரு பில்லியன் வசூலைத் தாண்டி சாதனை படைத்தது. தற்போது ஸ்கைஃபால் இயக்குநர் சாம் மெண்டிஸ் இயக்கத்தி, டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க, 24-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் பெயரை, இன்று லண்டன் பைன்வுட் ஸ்டூடியோவில், ஊடகங்கள் முன்னிலையில், இயக்குநர் சாம் மெண்டிஸ் அறிவித்தார். டேனியல் க்ரெய்க் உடன்., கிறிஸ்டோஃப் வால்ட்ஸ், மோனிகா பெலூசி, ஆண்ட்ரூ ஸ்காட் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் 4-வது திரைப்படம் 'ஸ்பெக்டர்' என்பது குறிப்பிடத்தக்கது.