

வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'தி இன்டெர்வியூ' படத்தை வெளியிடப் போவதில்லை என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ பத்திரிகை நிருபர்கள் இருவர் நேர்காணலுக்காக சந்தித்து, பின்னர் அவரை படுகொலை செய்ய திட்டமிடுவதே இந்த படத்தின் மைய கதை. கிம் ஜோங்காக ராண்டல் பார்க் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை சோனி நிறுவனம் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட இருந்தது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ எதிர்மறையாக சித்தரித்துள்ளதால் இந்த படத்துக்கு வட கொரிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த படத்தின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் சில அடையாளம் தெரியாத ஹேக்கர்களால் கடந்த டிசம்பர் 16-ஆம் ஆக்கிரமிக்கப்பட்டது.
" 'தி இன்டெர்வியூ' படத்தை வெளியிட்டால் சோனி நிறுவனம், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது இரட்டை கோபுர தாக்குத்தலுக்கு இணையான தாக்குதல் நடத்தப்படும். திரையரங்கு இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்கள் வேறு பகுதிக்கு ஓடி மறைந்து கொள்வது நல்லது.
மேலும் நாங்கள் சோனி நிறுவனம் எதிர்காலத்தில் வெளியிட இருக்கும் படங்களை இணையதளங்களில் கசியவிடுவோம். அவர்களின் அலுவலகங்கள் தாக்கப்படும்" என்று ஹேக்கர்கள் தங்களது மிரட்டலில் குறிப்பிட்டனர்.
கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருக்கும் 'தி இன்டெர்வியூ' படம் முற்றிலும் பயங்கரவாதம் தொடர்பான படம். இந்த படம் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக வெளிவரபோகிறது என்ற தலைப்போடு ஹேக்கர்கள் தங்களது மிரட்டலை வெளியிட்டிருந்தனர்.
ஹேக்கர்களின் மிரட்டலைத் தொடர்ந்து 'தி இன்டெர்வியூ' படத்தை வெளியிடப்போவது இல்லை என்று சோனி பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. படத்தை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ள 'சோனி' நிறுவனத்துக்கு திரைப்படக் குழுவினர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சைபர் ஹேக்கர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து சோனி எடுத்துள்ள இந்த முடிவு தவறானது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முன்னாள் அதிபர் ஜார்க் புஷ்ஷும் தெரிவித்துள்ளனர்.
கண்டனங்களை தொடர்ந்து சோனி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "நாங்கள் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டே இந்த படத்தை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சோனி பிக்சர்ஸின் ஹேக்கிங்குக்கு வட கொரியா தான் காரணம் என்றும், நாளைக்குள் ஹேக் செய்தவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.