

'பிக் ஹீரோ 6' என்ற அனிமேஷன் திரைப்படம் எதிர்பாராதவிதமாக அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படத்தை முந்தியது.
கடந்த வெள்ளி அன்று வெளியான இத்திரைப்படம் 56.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை 3 நாட்களில் வசூலித்துள்ளது. ’இண்டர்ஸ்டெல்லார்’ சிறிய வித்தியாசத்தில் 52.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
'இன்செப்ஷன்', 'டார்க் நைட் ரைஸஸ்' பட வெற்றிகளைத் தொடர்ந்து, பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'இன்டர்ஸ்டெல்லார்' கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரே சமயத்தில் வெளியானது. அதே நாளில் டிஸ்னியின் அனிமேஷன் படைப்பான 'பிக் ஹீரோ 6' படமும் வெளியானது.
முதல் இரண்டு நாட்களில் இந்த இரு படங்களுக்கும் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவியது. மூன்று நாள் முடிவில், 'பிக் ஹீரோ 6' சில மில்லியன் டாலர்கள் வித்தியாசத்தில் 'இன்டர்ஸ்டெல்லாரை' முந்தியது.
'பிக் ஹீரோ 6' தாங்கள் நினைத்ததை விட அதிகமாகவே வசூல் செய்துள்ளதாக டிஸ்னி விநியோகப் பிரிவின் தலைவர் டேவ் ஹாலிஸ் தெரிவித்தார். அதே நேரத்தில் ’இன்டர்ஸ்டெல்லார்’, ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.