

சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் தன்னைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என நடிகர் ஜாக்கிசான் கூறியுள்ளார்.
63 வயதான ஜாக்கிசான் தனது ஆக்ஷன் காட்சிகளைப் பற்றி மெட்ரோ இதழுக்காக பேசுகையில், "எனது சண்டைக் காட்சிகளை பெரும்பாலும் நான் தான் செய்கிறேன். அதைத்தான் ரசிகர்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஒரு சில காட்சிகளில் டூப் பயன்படுத்துகிறேன். ஆனால் 90 சதவீதத்துக்கும் அதிகமான சண்டைகளில் நான்தான் இருக்கிறேன்.
சண்டைக் காட்சியில் நடிப்பது எனக்கு எளிதாக இருக்கிறது. அதில் தான் நான் சிறப்பாக செயல்படுகிறேன். கண்டிப்பாக சில பிரத்யேக உத்திகள் மற்றும் கேமரா கோணங்களின் உதவியை நாடுகிறேன். இருந்தாலும் சண்டைக் காட்சிகள் தான் எனக்கு எளிது.
எனது ஜேசி ஸ்டண்ட் டீம் 1975 ஆண்டு ஆரம்பிக்கப்படது. அவர்களுடன் தான் சண்டைக் காட்சிகளுக்கான ஒத்திகையைப் பார்ப்பேன். நாங்கள் பெரும்பாலும் ஒன்றாக நேரத்தை செலவிடுவோம். அவர்கள் எனது சகோதரர்களைப் போல. எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வோம்" என்றார்.
ஜாக்கிசான் தற்போது 'ப்ளீடிங் ஸ்டீல்' என்ற சைனீஸ் படத்தில் நடித்தி வருகிறார். ஹாலிவுட்டில், 'ஃபாரினர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.