

'டன்கிர்க்' படத்தின் படப்பிடிப்பில், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளுக்கு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தடை விதித்ததாக, படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் மார்க் ரைலன்ஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள 'டன்கிர்க்', உலகம் முழுவதும் வெற்றி நடை போட்டு வருகிறது.
தற்போது இந்த படம் பற்றி பேசியுள்ள நடிகர் மார்க் ரைலன்ஸ், "தளத்தில் நடிகர்களுக்கு நாற்காலிகளோ, தண்ணீர் பாட்டில்களோ இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பாட்டில்கள், பொம்மைகளைப் போல. அதன் சத்தம் நம் கவனத்தை சிதறடிக்கும். நாற்காலிகள் இல்லாமல் போனால் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் ஓய்வெடுக்க உட்கார மாட்டார்கள். இதுவே இயக்குநரின் முடிவுக்கு காரணம்.
ஆனால் நடிகர்கள் இந்த கண்டிப்பான முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பின்பற்றினர். நோலன் அந்தக் கலையில் ஆழ்ந்து, தீவிரமாக இருந்தார் என்பதை இது காட்டியது" என்று கூறியுள்ளார்.