

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 'டெர்மினேட்டர் 'படங்களை மீண்டும் துவக்க யோசிப்பதாகக் கூறியுள்ளார். மூன்று படங்களுக்கான் திட்டங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
'அவதார்', 'டைட்டானிக்' படங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூனுக்கு அடையாளம் பெற்றுத் தந்த படம் 'டெர்மினேட்டர்'. உலகளவில் பிரபலமான 'டெர்மினேட்டர்' அவருக்கு தொடர் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
'டெர்மினேட்டர்' படம் எடுப்பதற்கான உரிமைகள் பல கைகள் மாறியிருந்தாலும் அமெரிக்காவின் காப்புரிமை விதிகளின் படி 2019ஆம் வருடத்தில் சில உரிமைகள் ஜேம்ஸ் கேமரூனுக்கு செல்லும்.
இதுவரை 5 'டெர்மினேட்டர்' படங்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் இரண்டு படங்களை மட்டுமே ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். தற்போது, புதிய மூன்று பாகங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கேமரூன் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டம் வரையில் அர்னால்டின் பங்கும் இந்தப் படங்களில் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் புதிய கதாபாத்திரங்கள் மூலமே பெரும்பாலும் கதைகள் நகரும். இது பற்றி பேசிய கேமரூன், "கேள்வியே, இந்த படங்களுக்கான மவுசு முடிந்துவிட்டதா. அல்லது புத்துணர்ச்சி கிடைக்குமா என்பதுதான். முதல் இரண்டு படங்களில் காட்டிய கற்பனை விஞ்ஞானத்தை தற்போது மக்கள் நிஜத்தில் அனுபவித்து வருகின்றனர். வேட்டையாடும் தானியங்கி விமானங்கள், கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி என வாழ்ந்து வருகிறோம்.
தற்போது டேவிட் எல்லிசனுடன் பேசி வருகிறேன். அவரிடம் தான் தற்போது 'டெர்மினேட்டர்' உரிமைகள் இருக்கின்றன. ஒன்றரை வருடங்களில் படத்துக்கான அமெரிக்க சந்தை உரிமை என்னிடமே வந்துவிடும். மேற்கொண்டு என்ன செய்யலாம் என பேசிக் கொண்டிருக்கிறோம்.
சில சிக்கல்களைக் கடந்துவிட்டால், கதைக்கான உருவத்தைத் தந்துவிடுவோம். அதற்கான அறிவிப்பும் வரும்" என்று அவர் கூறியுள்ளார்.