என் அடுத்த படத்தில் இந்திய நடிகர்களுக்கு வாய்ப்பு: எலிசபெத் இயக்குநர் சேகர் கபூர்
'எலிசபெத்' திரைப்பட புகழ் சேகர் கபூர் தனது அடுத்த ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
'மசூம்', 'மிஸ்டர் இந்தியா', 'பாண்டிட் குயின்' உள்ளிட்ட பிரபல இந்தி படங்களையும், 'எலிசபெத்', 'நியூயார்க் ஐ லவ் யூ' உள்ளிட்ட ஆங்கிலப் படங்களையும் சேகர் கபூர் இயக்கியுள்ளார்.
பாஃப்டா விருது, தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது 'டைகர்ஸ் கர்ஸ்' (‘Tiger’s Curse’) என்ற ஹாலிவுட் மாயாஜாலத் திரைப்படத்தை சேகர் கபூர் இயக்கவுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "அமெரிக்காவில் புகழ்பெற்ற, அதிகம் விற்பனையான நாவல் இது. 'ட்வைலைட்' கதைகளைப் போன்றே சுவாரசியமானது. இதில் இந்திய நடிகர் நடிகைகளை நடிக்க வைக்க யோசித்து வருகிறேன். ஆனால் இப்போதைக்கு எதுவும் இறுதி செய்யப்படவில்லை" என்று கூறினார்.
மேலும், ’பானி’ என்ற சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தையும் சேகர் கபூர் இந்தி மொழியில் இயக்கவுள்ளார். எதிர்காலத்தில் கார்ப்பரெட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் குடிநீர் விநியோகம் இருக்கும் போது நேரும் பிரச்சினைகளைப் பற்றி பேசும் படம் இது. ஆனால் இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை.
68 வயதான சேகர் கபூர், சென்ற வருடம் தமிழில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திலும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
