

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம், முதல் வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1.28 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ஹாலிவுட்டில் 'மெமென்டோ'வைத் தொடர்ந்து பிரபலமான கிறிஸ்டோபர் நோலன், 'இன்செப்ஷன்' மற்றும் 'டார்க் நைட்' படங்களின் மூலம் உலகளவில் பெயர் பெற்றார். தமிழகத்தில், ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூனைப் போல நோலனுக்கும் கணிசமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.
நோலனின் சமீபத்திய படமான இன்டர்ஸ்டெல்லார், தமிழ்நாட்டில், வெளியான முதல் வாரத்தில் 1.28 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கண்காணித்து வரும் வல்லுநர் த்ரிநாத் கூறுகையில், “நோலனின் முந்தைய படங்களும் தமிழகத்தில் நன்றாக ஓடியிருக்கின்றன. இன்டர்ஸ்டெல்லார் படத்தின் மூலம், இதுவரை தமிழகத்தில் வெளியான ஆங்கிலப் படங்களின் வசூல் சாதனைகளை, முதல் வாரத்தில் நோலன் முந்தியுள்ளார்.” என்றார்.
மனிதர்கள் வாழ, பூமியைத் தவிர வேறு கிரகங்கள் இருக்கிறதா என்பதை சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இன்டர்ஸ்டெல்லார், உலகம் முழுவதும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, வசூலிலும் அசத்துவது குறிப்பிடத்தக்கது.