

நடிகர் டேனியல் க்ரெய்க் மீண்டும் 'ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிகர் டேனியல் க்ரெய்க் இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். 'ஸ்பெக்டர்' அவர் கடைசியாக நடிக்கும் பாண்ட் படம் எனத் தெரிவிக்கப்பட்டது. 'ஸ்பெக்டர்' படத்தில் நடித்த பிறகு, இனி இந்த பாத்திரத்தில் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு அதற்கு என் மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன் என அவர் பதிலளித்திருந்தார்.
ஆனால் தற்போது பாண்ட் திரைப்படங்களின் தயாரிப்பாளர் பார்பரா ப்ரொகோலி, டேனியல் க்ரெய்கை மீண்டும் தலைமை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பார்பரா தயாரித்த ப்ராட்வே நாடகமான 'ஒதெல்லோ'வை கண்ட டேனியல் க்ரெய்குக்கு அது மிகவும் பிடித்திருந்ததாகவும், எனவே அவரது தயாரிப்பில் கடைசியாக ஒருமுறை மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க இணங்கியிருப்பதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே பாண்ட் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள பர்வீஸ் - வேட் கூட்டணி புதிய திரைக்கதை எழுதியுள்ளனர். டேனியல் க்ரெய்க் சம்மதம் தெரிவித்ததும் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகும் என்றும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.