

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றிய படம் ஹாலிவுட்டில் தயாராகவுள்ளது. இதனை இயக்குநர் டேனி போயல் இயக்கவுள்ளார். மைக்கேல் ஃபாஸ்பென்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் பாத்திரத்தில் நடிக்கிறார்.
புகழ்பெற்ற மனிதர்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது ஹாலிவுட்டில் வழக்கம்தான். ஆனால் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை படமாக்க முதலில் முடிவெடுத்த சோனி நிறுவனம், பல தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது. சோனி நிறுவனத்தால், ஸ்டீவ் ஜாப்ஸ் பாத்திரத்தில் நடிக்கவும், படத்தை இயக்கவும் ஆட்களை தேர்வு செய்ய முடியவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக, நடிகர்கள் லியார்னடோ டி காப்ரியோ, கிறிஸ்டியன் பேல், இயக்குநர் டேவிட் ஃபின்சர் உள்ளிட்ட பலரது பெயர்கள் இதில் சம்பந்தப்பட்டாலும் யாரும் இந்த படத்தில் இணைய விருப்பம் காட்டவில்லை. வெறுத்துப் போன சோனி நிறுவனம் கடந்த வாரம் இந்த தயாரிப்பை கைவிடுவதாக அறிவித்தது.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள மற்றொரு முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யூனிவெர்சல் பிக்சர்ஸ், 30 மில்லியன் டாலர் கொடுத்து, வால்டர் ஐசக்சன் எழுதிய, 'ஸ்டீவ் ஜாப்ஸ்' என்ற புத்தகத்தின் அடிப்படையில், ஆரோன் சார்கின் எழுதிய திரைக்கதையை சோனியிடம் இருந்து வாங்கியுள்ளது.
இத்திரைப்படத்தை 'ஸ்லம்டாக் மில்லியனர்', '127 ஹார்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய டேனி போயல் இயக்குவார் என்றும், 'எக்ஸ் மென்', 'ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மைக்கேல் ஃபாஸ்பென்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் பாத்திரத்தில் நடிப்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.