

தனது பட விளம்பரத்துக்காக, டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜிம் கேரி, ரசிகையின் தலையை தவறுதலாக மொட்டையடித்தார்.
நகைச்சுவைக்கு புகழ்பெற்ற நடிகர் ஜிம் கேரி நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான படம் 'டம் அண்ட் டம்மர்' (Dumb and Dumber).இத்திரைப்படத்தின் வெற்றி ஜிம் கேரியின் சினிமா பயணத்தை ஸ்திரப்படுத்தியது. இதன் இரண்டாம் பாகம் 20 வருடங்கள் கழித்து வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்த டிவி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார் கேரி. படத்தில் தனது கதாபாத்திரத்தின் சிகை அலங்காரத்தைப் போன்றே, ரசிகை ஒருவருக்கும் சிகை அலங்காரத்தை மாற்ற முயற்சி செய்தார் கேரி. ஆனால் தவறுதலாக ரசிகையின் நீண்ட தலைமுடியை மொத்தமாக கத்தரித்தார்.
என்ன நடக்கிறது என புரியாமல் ரசிகை முழிக்க, விளம்பர இடைவேளை விடப்பட்டது. நிகழ்ச்சி தொடரும்போது அந்த ரசிகையின் தலை மொட்டையாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் ஒருவருக்கும் ஜிம் கேரி சிகை அலங்காரத்தை மாற்ற முயற்சி செய்தார். அதிர்ஷ்டவசமாக இம்முறை ஒழுங்காக மாற்றியமைத்தார்.