

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். 'xXx' படத்தின் அடுத்த பாகத்திலும் அவர் நடிப்பார் என படத்தின் இயக்குநர் டிஜே காருஸோ தெரிவித்துள்ளார்.
வின் டீசல், தீபிகா படுகோனே, சாமுவல் ஜாக்ஸன் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான 'xXx ஸாண்டர் கேஜ்' திரைப்படம் உலகளவில் 346 மில்லியல் டாலர்களை வசூலித்தது. xXx பட வரிசையில் மூன்றாவது பாகம் இது. தற்போது இதன் நான்காவது பாகம் தயாராகவுள்ளது.
3-வது பாகத்தில் நடித்த நடிகை ரூபி ரோஸ், தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு, அடுத்த பாகம் தயாராகவுள்ளது என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதைக் குறிப்பிட்டு, படத்தின் இயக்குநர் காருஸோவிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அடுத்த பாகம் தயாராகவிருப்பது உண்மைதான் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்கவுள்ளது என்றும் பதிலளித்துள்ளார்.
இன்னொரு ரசிகர், தீபிகா இதில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஆம் சென்ற பாகத்தில் இருந்த அனைவரும் மீண்டும் வருகின்றனர் என்று பதில் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தீபிகாவின் 2-வது ஹாலிவுட் படம் உறுதியாகியுள்ளது. தீபிகா தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார்.