

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவைக் கண்டித்து ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல கலைஞர்கள் தங்கள் உடையில் நீல ரிப்பனை குத்திக்கொண்டு வந்தனர்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு அவரைக் கண்டித்து ஹாலிவுட்டை சேர்ந்த பலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்கர் விழாவிலும் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்த டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து ஆஸ்கர் விழாவுக்கு வந்த பல கலைஞர்கள் தங்கள் ஆடையில் நீல ரிப்பனை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க சிவில் உரிமைகள் என்ற அமைப்புக்கான ஆதரவை இந்த நீல ரிப்பன் குறிக்கும். இந்த அமைப்பே ட்ரம்பின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்துள்ளது.
சிறந்த நடிகை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ரூத் நெக்கா, சிறந்த நடிகர் விருதைப் பெற்ற கேஸி ஆஃப்லெக் உள்ளிட்ட பல கலைஞர்கள் ஆஸ்கர் விழாவில் தங்கள் எதிர்ப்புகளை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.