

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தன்னுடைய முதல் ஹாலிவுட் படமான 'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்: த ரிட்டர்ன் ஆஃப் ஸேண்டர் கேஜ்' -ன் லோகோவை வெளியிட்டிருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் வின் டீசல் உடன் தன்னுடைய ஹாலிவுட் பயணத்தைத் தொடங்கி இருக்கும் தீபிகா, படத்தில் செரீனா அங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்' என்ற சின்னத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்திருக்கிறார் தீபிகா.
அத்தோடு கூடிய காணொளிக்கு, 'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்: த ரிட்டர்ன் ஆஃப் ஸேண்டர் கேஜ்' படத்தின் லோகோ வெளியிடப்படுகிறது. செரீனா அங்கர்: என்று தலைப்பிட்டிருக்கிறார்.
'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்' சின்னம் அடர் சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ''உலகம் மாறிவிட்டது. நமக்கே தெரியாத பயமுறுத்தல்களைக் கையாளும் திறமைகளைக் கொண்ட மக்கள் வேண்டும். நமக்கு வித்தியாசம் நிறைந்த அத்தகைய வீரர்கள்தான் தேவை'' என்ற வின் டீசலின் வலிமையான வார்த்தைகள் அதன் பின்னணியில் ஒலிக்கின்றன.
படத்தின் இயக்குநர் டி.ஜே. க்ருஸோ. இந்தப் படம் 2002-ல் வெளிவந்த 'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்', 2005-ல் வெளியான 'எக்ஸ்எக்ஸ்எக்ஸ்: ஸ்டேட் ஆஃப் த யூனியன்' ஆகிய படங்களின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகன் மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதத்தைத் தேடும் பயணத்தில் காலத்தை எதிர்த்துப் போராடுகிறார். அப்போது நிகழும் சம்பவங்களும், பிரச்சினைகளுமே படம் என்கிறது படக்குழு.
படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது.
தீபிகா பகிர்ந்துள்ள காணொளியைக் காண: >https://www.instagram.com/p/BH3Oiz4DeSj/?taken-by=deepikapadukone&hl=en