Published : 24 May 2019 01:46 PM
Last Updated : 24 May 2019 01:46 PM

8-வது சீஸன் ஏமாற்றமாகத்தான் இருந்தது: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து ராஜமௌலி கருத்து

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் குறித்து இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார்.

1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதே ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிஸோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர்,  கடந்த 20-ம் தேதி முடிவுக்கு வந்தது. ரசிகர்களும் பிரபலங்களும், தொடர் முடிவுற்றது குறித்து உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ‘ நான் ஈ’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,

“குட்பை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இது ஒரு அற்புதமான பயணம். 10 வருடங்களாக நீங்கள் எங்களுக்குப் பல்வேறு உணர்வுகளைத் தந்து, எங்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தைக் கொடுத்தீர்கள். கதை சொல்லும் கலையில் நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தோடு போட்டியிடுவது, பல வருடங்களுக்குச் சிரமமாக இருக்கும்.

இந்தக் கதாபாத்திரங்கள் உயிரோடு இருந்தாலும் இறந்திருந்தாலும், அவைகள் நம் நினைவுகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ளது, நன்றி. ஆம்... 8-வது சீஸன் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால், நீங்கள் ஆரம்பம் முதலே இதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறீர்கள்.

இவ்வாறு ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x