

அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகமான ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் க்ளைமாக்ஸில் ஒரு காட்சி எந்திரன் படத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாகவும் பின்னர் சில காரணங்களால் அந்த காட்சி தவிர்க்கப்பட்டதாகவும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர் ஜோ ருஸ்ஸோ கூறியுள்ளார்.
மார்வெல் நிறுவனத்தின் 22வது படமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ருஸ்ஸோ ப்ரதர்ஸ் என்று அழைக்கப்படும் ஜோ ருஸ்ஸோ, ஆண்டனி ருஸ்ஸோ ஆகியோர் இயக்கியுள்ளனர். ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் மார்வெல் நிறுவனத்தில் ருஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கும் 4வது படம். இதற்கு முன் ’கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர்’ ’கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ’மார்வெல் அன்தெம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக படத்தின் இயக்குனர் ஜோ ருஸ்ஸோ இந்தியா வந்தார். பின்னர் ஒரு பேட்டியில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் 2010ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பல ரோபோக்கள் சேர்ந்து ஒரு பெரிய ரோபோவாக உருமாறும். அந்த காட்சியை தழுவி ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்' படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனான அல்ட்ரான் ரோபோக்கள் ஒன்று சேர்ந்து ஒரு மெகா சைச் அல்ட்ரானாக மாறுவது போன்று ஒரு காட்சியை படமாக்கியதாகவும் பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரஜினிகாந்தையும், சல்மான்கானையும் எந்த மார்வெல் கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பீர்கள் என்ற நெறியாளரின் கேள்விக்கு “ரஜினிகாந்தை அயர்ன்மேனாகவும், சல்மானை ’ஹல்க்’காகவும் நடிக்க வைக்கலாம்” என்று ஜோ ருஸ்ஸோ கூறினார்.