

அடுத்த வாரம் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குநர்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளனர்.
2009-ம் ஆண்டு தொடங்கிய மார்வல் சினிமா டிக் உலகத்தின் கதை இந்த 'எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' வெளியாகி 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியே எண்ட்கேம்.
வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குநர்களான ருஸோ ப்ரதர்ஸ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளனர். இதுகுறித்து நேற்று அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
உலகின் மிக உயர்ந்த ரசிகர்களுக்கு,
இதோ இறுதிகட்டத்தை நெருங்கி விட்டோம்.
இந்த நீண்ட பயணத்தின் தொடக்கத்திருலுந்து எங்களின் வெற்றி தோல்விகளை நண்பர்கள், குடும்பம், வகுப்புத் தோழர்கள், சக ஊழியர்கள் என அனைவரிடம் பகிர்ந்து கொண்டு எங்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறீர்கள். எங்களின் ஒவ்வொரு கதையிலும், கதாபாத்திரத்திலும் உங்களின் சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் ஆகியவற்றை முதலீடு செய்துள்ளீர்கள்.
உங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகளாக நம்மோடு சேர்ந்து பலரும் சக்தி வாய்ந்த, உணர்வுப்பூர்வமான இந்த படங்களின் இறுதி கட்டத்துக்காக அயராது உழைத்துள்ளனர்.
இந்த கதைகளில் உங்களில் பலரும் உங்களுடைய நேரத்தையும், மனதையும், ஆன்மாவையும், முதலீடு செய்துள்ளீர்கள். ஆதலால் உங்களிடம் மீண்டும் ஒரு உதவியை வேண்டுகிறோம்.
அடுத்த வாரம் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வெளியாகிறது. எப்படி நீங்கள் படம் பார்ப்பதற்கு முன் யாரும் உங்களிடம் கதை சொல்லக் கூடாது என்று எதிர்பார்ப்பீர்களோ அதே போல நீங்களும் படம் பார்த்தபின் கதையை யாருக்கும் சொல்லாதீர்கள்.
நினைவிருக்கட்டும், தானோஸ் உங்களின் அமைதியை எதிர்பார்க்கிறான்.
வாழ்த்துக்களுடன்,
ருஸோ பிரதர்ஸ்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ரூஸோ சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இருவரும் இதற்கு முன் 'கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர்', ' கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்கள்.