

ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25-வது படத்தில் ஹீரோவாக டேனியல் கிரெய்க் நடிக்க அவருக்கு வில்லனாகிறார் ஆஸ்கர் விருது வென்ற ரமி மாலெக்.
டேனியல் கிரெய்க் இதற்கு முன்னதாக 'கேசினோ ராயல்', 'குவாண்டம் ஆஃப் சோலேஸ்', 'ஸ்கைஃபால் அண்ட் ஸ்பெக்டர்' ஆகிய பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதுதான் அவருக்கு கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிரெய்க், மாலெக் தவிர ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25-வது பாகத்தில் ரேல்ஃப் பியனெஸ், பென் விஷ்ஸா, ரோரி கின்னியர், நவோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட் ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு ஜமைக்காவில் உள்ள எழுத்தாளர் இயன் ஃபிளமிங்கின் பங்களாவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் இயன் ஃபிளமிங்க் இங்கிருந்தே ஜேம்ஸ் பாண்ட் கதைகளை எழுதினார். அதனாலேயே ஜமைக்கா எப்போதும் பாண்ட் படத்தின் முக்கிய படப்பிடிப்புத் தளமாக உள்ளது.
இந்தப் படத்தை நார்வே, இத்தாலி மற்றும் கரிபீயன் தீவுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. லண்டனில் சில காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு தளம் ஆகியவை உறுதி செய்யப்பட்டாலும்கூட ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில், படம் குறித்து இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுநாகா கூறும்போது, "டேனியல்தான் எனக்கு மிகவும் பிடித்தமான பாண்ட் நடிகர். இந்தப் படம் சிறப்பானதாக அமைந்து அடுத்த சீரிஸுக்கு ஒரு சவாலாக அமையும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.