

'தி டார்க் நைட் ரைசஸ்' படத்தின் இசையை முன் அனுமதியின்று பிரச்சாரத்தில் பயன்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
உள்ளூரில் பிரபலமான பாடல்களின் வரிகள் மாற்றி, வேறொருவரைப் பாட வைத்து அதை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது நமது ஊரில் வழக்கம். இதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறுகிறார்களா, இல்லையா என்பது கேள்விக்குறியே.
ஆனால், காப்பிரைட் சட்டங்கள் கடுமையாக இருக்கும் அமெரிக்காவில் இது போன்ற விஷயங்களிலிருந்து அதிபரே தப்ப முடியாது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது பிரச்சார வீடியோவில், ’தி டார்க் நைட் ரைசஸ்’ படத்தின் இசையை அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர்களான வார்னர் ப்ராஸ் நிறுவனம், அவர் மீது காப்புரிமை மீறல் வழக்கைத் தொடரவுள்ளது.
வை டு வீ ஃபால் என்ற பாடலை ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார். இது அனுமதிபெறாத பயன்பாடு என வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.
ட்ரம்ப் ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோ காப்புரிமை பிரச்சினையால் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் நீக்கப்படுவதற்கு முன்பே 2 மில்லியன் பார்வைகளை வீடியோ பெற்றுவிட்டது.
வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து இதுவரை இதுகுறித்த எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.