

தான் விரைவில் இந்தியா வந்து தனது ரசிகர்களை கண்டிப்பாக சந்திக்கவுள்ளதாக நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 26-ஆம் தேதி 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு உலகம் முழுவதும் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மார்வல் படங்களில் 'அயர்ன்மேன்' கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராபர்ட் டவுனி ஜூனியர், டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூருவில் இருக்கும் தனது ரசிகர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்தித்து உரையாடினார்.
அந்தந்த நகரங்களில் பெரிய திரையரங்களில் ரசிகர்களுக்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டவுனி திரையில் தோன்றியதும் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இதை எதிர்பார்க்காத டவுனி, "நீங்கள் எல்லோரும் அற்புதமான ரசிகர்கள். இந்தியா வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். நான் இதுவரை இந்தியா வரவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கண்டிப்பாக விரைவில் அங்கு வருகிறேன்" என டவுனி கூறினார்.
எண்ட்கேம் படம் முடிந்த பிறகு நடந்த பார்ட்டியில் சுவாரஸ்யமாக என்ன நடந்து என்று ஒரு ரசிகர் கேட்க, அதற்கு சற்று உணர்ச்சிகரமாகவே பதிலளித்தார் டவுனி.
"பார்ட்டியில் என்ன நடந்தது என்று நினைவில்லை. அப்படியென்றால் அது நல்லபடியாக இருந்திருக்கும். 'இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் படம்பிடித்தோம். அனைத்து சூப்பர் ஹீரோ நடிகர்களும் பெரும்பாலான நேரம் ஒன்றாகத்தான் நேரம் செலவிட்டோம். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்த காலத்தின் உச்சகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எண்ட்கேம் இருக்கிறது" என்றார்.