

'பாகுபலி 3' படத்தில் வாய்ப்பு தந்தால் நடிப்பேன் என ஹாலிவுட் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் கூறியுள்ளார்.
மார்வல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்தத் திரைப்படங்களின் கதைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் நிக் ஃபியூரி என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் ஒன்று. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சாமுவேல் ஜாக்சன். இவர் 'ஜுராசிக் பார்க்', 'பல்ப் ஃபிக்ஷன்', 'ஸ்டார் வார்ஸ்' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த வாரம் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'கேப்டன் மார்வல்' வெளியாகியுள்ளது. இதிலும் நிக் ஃபியூரி கதாபாத்திரம் தோன்றுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி பல யூடியூப் சேனல்களுக்கு படக்குழுவினர் பேட்டியளித்திருந்தனர்.
இதில் ஒரு பேட்டியில் சாமுவேல் ஜாக்சனிடம், இந்தியா வர திட்டமுள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இந்தியாவில் எனக்கு வேலை கிடைத்தால் வருவேன்” என்று பதிலளித்தார்.
பாலிவுட் படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டதற்கு, "ஆம், 'பாகுபலி 3' படத்தில் நடிக்க விருப்பம்" என்று சாமுவேல் ஜாக்சன் சொல்ல, ஆச்சரியமடைந்த தொகுப்பாளர் நிஜமாகவா என ஆச்சரியத்துடன் கேட்க, "விளையாட்டுக்குச் சொன்னேன். என்னால் இந்தியப் படங்களில் வருவது போல பாடவோ, ஆடவோ முடியாது. ஆனால் அப்படி பாவனை செய்ய முடியும்" என்று கூறினார்.
'பாகுபலி' 1 மற்றும் 2 சேர்ந்து சர்வதேச அளவில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தன. ஹாலிவுட் நடிகர் ஒருவர் 'பாகுபலி' பற்றி குறிப்பிட்டிருப்பது, அந்தப் படத்தின் தாக்கத்தைக் காட்டும் விதமாகவே உள்ளது.