

இந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ’அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் வசனம் எழுதுகிறார்.
கடந்த ஆண்டு வெளியான ’அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படவரிசையில் 4வது பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ இந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஹாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்துக்கு தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார். இதை டிஸ்னி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது,
“எப்போதும் மார்வெல் படங்களை ஆச்சர்யத்துடன் ரசித்து பார்ப்பேன். ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தை நாடே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒரு மார்வெல் ரசிகனாக அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா போன்ற சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது மகழ்ச்சியை தருகிறது. என் மகன் ஆதித்யாவுக்கு நன்றி. படத்தில் தமிழுக்கு ஏற்றார்போல் சில விஷயங்களை சேர்த்துள்ளேன்.”
இவ்வாறு முருகதாஸ் கூறியுள்ளார்.