எனது அடையாளத்தை தேடிக்கொண்டிருந்தேன்: சிறந்த நடிகர் ஆஸ்கர் பெற்ற ரமி மாலெக் நெகிழ்ச்சி

எனது அடையாளத்தை தேடிக்கொண்டிருந்தேன்: சிறந்த நடிகர் ஆஸ்கர் பெற்ற ரமி மாலெக் நெகிழ்ச்சி
Updated on
1 min read

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ரமி மாலெக்கின் பேச்சு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. 

91-வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றிரவு ஹாலிவுட்டில் நடந்து முடிந்தது. இதில் பொஹிமியன் ராப்ஸோடி படத்தில், பாடகர் மெர்குரி கதாபாத்திரத்தில் நடித்த ரமி மாலெக் என்ற நடிகருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சென்றது.

அரேபிய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆஸ்கர் பெறுவது இதுவே முதல்முறை. மேலும் ரமி மாலெக் ஒரு முதல் தலைமுறை அமெரிக்கர். விருது வென்ற ரமி மாலெக் மேடையில் இது பற்றி பேசுகையில், "குழந்தையாக, எனது அடையாளத்தை இனம் கண்டுகொள்வதில் பிரச்சினை இருந்தது. நான் யாரென தெரிந்து கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தேன். 

இப்படி தங்கள் அடையாளத்தை வைத்து தத்தளித்துக் கொண்டிருப்பவர்களே, தங்கள் உள்ளத்தின் குரலை மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களே கேளுங்கள். நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரைப் பற்றி, குடிபெயர்ந்து வந்த ஒருவரைப் பற்றி, தன் வாழ்க்கையை எந்த வருத்தமுமின்றி தன் இஷ்டப்படி வாழ்ந்த ஒருவரைப் பற்றிய படத்தை எடுத்தோம். 

அந்த மனிதரையும், அவரது கதையையும் உங்களுடன் சேர்ந்து இந்த இரவில் நான் கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். இப்படியான கதைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான சான்று இது. நான், எகிப்து நாட்டிலிருந்து இங்கு குடிபெயர்ந்து வந்தவர்களின் மகன். முதல் தலைமுறை அமெரிக்கன். 

எனது வரலாற்றில் ஒரு பகுதி இப்போது எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நான் இந்தத் தருணத்தில் கடன் பட்டிருக்கிறேன். இந்த தருணத்தை என் வாழ்க்கை முழுவதும் பொக்கிஷமாய் பாதுகாப்பேன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த விழாவில், மாலெக் தனது காதலியும் சக நடிகையுமான லூசியிடம் நடந்து கொண்ட விதம் பற்றியும் நெட்டிசன்கள் பலர் பாராட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in