

#BirdBox சேலஞ்ச் மேற்கொள்வதைக் கைவிடுமாறு நெட்ஃப்ளிக்ஸ் தனது பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லாக் நடிப்பில் வெளியான படம் 'பேர்ட்பாக்ஸ்'. இதில் சாண்ட்ரா தனது இரண்டு குழந்தைகள் 'பாய்' மற்றும் 'கேர்ள்' உடன் பாதுகாப்பான இடம் தேடிப் பயணிக்கிறார். கண் திறந்து பார்ப்பவர்களைத் தீய சக்தி அழித்து விடும் என்ற நிலை. இதனால் அவர்கள் மூவரும் கண்களைத் திறக்காமலேயே காடு, மலை, ஆறு தாண்டிப் பயணிக்கின்றனர். இந்த திகில் பயணமே BirdBox படம்.
இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் டிசம்பர் 13-ம் தேதி வெளியானது. படம் வெளியான ஒரு வாரத்துக்குள்ளாக 4.5 கோடிப் பேர் இப்படத்தைப் பார்த்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.
மக்கள் அனைவரும் தங்களின் கண்களை முழுமையாகக் கட்டி இருட்டாக்கிவிட்டு, அன்றாட வாழ்க்கையை நடத்துவதுதான் #BirdBox சேலஞ்ச். அமெரிக்காவில் வைரலாகி வந்த இந்த சேலஞ்சால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டன. இந்தியாவில் இதுகுறித்து ஏராளமான மீம்கள் உருவாக்கப்பட்டன.
சமூக வலைதளங்களில் ட்ரெண்டான இந்தப் போக்கால், #BirdBox சேலஞ்ச் மேற்கொள்வதைக் கைவிடுமாறு நெட்ஃப்ளிக்ஸ் தனது பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் #BirdBox சேலஞ்ச் குறித்துப் பதிவிட்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், ''நாங்கள் இதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. தயவு செய்து யாரும் BirdBox சேலஞ்சை மேற்கொண்டு உங்களைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம். இது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. உங்களின் அன்பை மதிக்கிறோம். ஆனால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளது.