

பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் இருந்து ரிமா தாஸ் இயக்கிய ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாமிய மொழி திரைப்படம் வெளியேறியுள்ளது.
இதுகுறித்து திங்கட்கிழமை அறிவித்த ஆஸ்கர் தேர்வு நிறுவனம், 91-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான போட்டியில் 9 பிறமொழிப் படங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரேமாதிரி இருக்கிறதா? அடிப்படை வசதிகள் அவர்களுக்குச் சென்று சேர்கிறதா? அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுடன், ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. இந்தப் படத்தின் தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றையும் இவரே மேற்கொண்டிருக்கிறார்.
அசாமின் சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுமி துனு. தனது கிராமத்தில் ஒரு மியூசிக்கல் பேண்ட் உருவாக்க வேண்டும் என்பது அவளது ஆசை. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் துனு, மியூசிக்கல் பேண்ட் உருவாக்கினாளா, இல்லையா என்று நகர்கிறது இப்படம். துனுவாக சிறுமி பனிதா தாஸ் நடித்திருக்கிறார்.
இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றது. இந்நிலையில் தற்போது பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் இருந்து ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ வெளியேறியுள்ளது.
இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. 2001-ம் ஆண்டில் ‘லகான்’ திரைப்படம் முதன்முறையாக முதல் 5 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.