

பெண் இயக்குநர் காரின் குசாமா இயக்கிய ஹாலிவுட் திரைப்படம் 'டெஸ்ட்ராயர்' வரும் ஜனவரி 25-ம் தேதி அன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெளியாகிறது. இப்படத்தின் நாயகியாக நிகோலே கிட்மேன் நடித்துள்ளார்.
2000-ம் ஆண்டில் 'கேர்ள்ஃபைட்' படம் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்தவர் காரின் குசாமா. சமீபத்தில் வெளியாகி உலகின் பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரது புதிய படமான 'டெஸ்ட்ராயர்' வரும் 2019-ல் ஜனவரி மாதம் இந்தியாவில் திரையிடப்படுகிறது.
இத்திரைப்படத்தை பிரபல திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான பிவிஆர் பிக்சர்ஸ் இந்தியாவின் முக்கிய திரையங்குகளில் வெளியிடுகிறது.
இப்படத்தில் ஒரு துப்பறியும் பெண்ணின் காதாபாத்திரம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கதாபாத்திரத்தில் நிகோலே கிட்மேன் என்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகை நடித்துள்ளார். இவர் தனது சிறந்த நடிப்புத் திறனுக்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். ஐந்துமுறை கோல்டன் குளோப் விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் இளம் பெண் துப்பறியும் அதிகாரி ஒரு மர்ம கும்பலிடம் சிக்கி எதிர்பாராமல் கலிபோர்னியா பாலைவனத்தில் கொண்டு செல்லப்படுகிறார் இளம் துப்பறியும் அதிகாரி. அதன் பிறகு அவரது கடந்தகாலம் முடிவுக்கு வர எதிர்காலம் என்ன ஆனது, அவர் மீண்டு வந்தாரா என்பது க்ரைம் த்ரில்லராக சொல்லப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடித்தது குறித்து நியூயார்க் டைம்ஸ்க்கு அவர் அளித்த பேட்டியில் டெஸ்ட்ராயரில் தன்னை நடிக்கவைத்த பெண் இயக்குநர் காரின் குசாமாவைப் பற்றி புகழ்ந்து கூறியுள்ள கருத்துகள் வருமாறு:
''காரின் குசாமா ரத்தமும் சதையுமான ஒரு உயிரோட்டமுள்ள இயக்குநர். அவர் அதிகம் பேசமாட்டார். அவ்வகையில் கடினமானவர்தான். ஆனால் எதையும் 'சரி நல்லது' என்று எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்.
ஆனால் நான் ஒரு ஆஸ்திரேலியப் பெண் என்பதால் அந்த அளவுக்கு விடமாட்டேன். நாங்கள் பெரும்பாலும் ஒருவரையொருவர் நன்றாகவே புரிந்துகொண்டோம். அவர் என்ன நினைக்கிறார், எதிர்பார்க்கிறார் என்பதை நான் தெளிவாக உணர்ந்துகொண்டேன். இதனால் எனக்குள்ள இடத்தைப் பாதுகாத்ததோடு இப்படத்தின்மூலம் நான் நினைத்துப் பார்க்காத ஒரு உயரத்தைத் தந்துவிட்டார்''.
இவ்வாறு நடிகை கிட்மேன் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் செபாஸ்டியான் ஸ்டான், டாஷியானா மால்ஸ்லேனி மற்றும் பிரேட்லி விட்போர்டு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த ஹாலிவுட் படத்தை நேபாள குலதெய்வத்தின் பெயரைக்கொண்ட அன்னபூர்ணா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.