திரை விமர்சனம்: Fantastic Beasts: Crimes of Grindlewald

திரை விமர்சனம்: Fantastic Beasts: Crimes of Grindlewald
Updated on
1 min read

முதல் பாகத்தின் முடிவில் கைது செய்யப்பட்ட க்ரிண்டல் வால்ட், சிறையிலிருந்து தப்பிக்கிறார். பின்னர் தனக்கான ஒரு ரகசியப் படையை உருவாக்குகிறார். அவரை படத்தின் நாயகனான  நியூட் ஸ்கமண்டரின் உதவியை நாடுகிறார் ஆல்பஸ் டம்புள்டோர்.

இதற்கிடையில் முதல் பாகத்தில் வரும் கிரெடன்ஸ் என்ற இளைஞனை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருக்கிறார் க்ரிண்டல் வால்ட். தான் யார், தன் தாய் யார் என்ற விடை தேடி அலையும் கிரெடன்ஸ் ஒரு கட்டத்தில் க்ரிண்டல் வால்டைச் சந்திக்கிறார். க்ரிண்டல் வால்ட் ஏன் கிரெடன்ஸைச் சந்திக்க விரும்பினார்? அவர் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டாரா? என்பதே fantastic beasts crimes of grindlewald.

2016-ம் ஆண்டு வெளியான fantastic beasts and where to find them படத்தின் இரண்டாம் பாகம் இந்தப் படம். ஹாரி பாட்டர் காலகட்டத்துக்கு 70 வருடம் முந்தைய கதை. எனவே படம் பார்க்க நினைப்பவர்கள் ஒருமுறை ஹாரி பாட்டர் படங்களைப் பற்றி தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

க்ரிண்டல் வால்ட் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது. வழக்கமான ஹாரி பாட்டர் படங்களைப் போன்ற கதைக்களம்தான். கிராபிக்ஸ் காட்சிகள், இசை, சிறப்பாக இருக்கிறது. மற்றபடி படத்தில் வசனங்களின் ஆக்கிரமிப்பே அதிகமாக இருக்கிறது. புத்தகங்கள் முதல் படங்கள் வரை அனைத்தையும் கரைத்துக் குடித்த ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு மட்டுமே படம் பிடிக்கும். முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யமும் நகைச்சுவைக் காட்சிகளும் இப்படத்தில் குறைவு.

க்ரிண்டல் வால்டாக ஜானி டெப், இளம் வயது டம்புள்டோராக ஜூட் லா, நாயகன் நியூட் ஸ்கமண்டராக  எட்டி ரெட்மெய்ன். தொய்வாகச் செல்லும் திரைக்கதையை பெரும்பாலும் காப்பாற்றுவது இவர்கள்தான்.

உதாரணமாக மார்வெல், டிசி காமிக்ஸ் படங்களை காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்கள் ரசிக்க முடியும். ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க ஹாரி பாட்டர் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படமாக இருப்பதால் கிராபிக்ஸுக்காகவும், விறுவிறு திரைக்கதையை எதிர்பார்த்து வந்தவர்கள் கொட்டாவி விடுவதைக் கவனிக்க முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in