

ஹாலிவுட் திரைப்படங்களில் ஸ்பைடர்மேன், அயர்ன் மேன், தி ஹல்க் ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கி, உலக ரசிகர்களைக் கட்டிப்போட்ட எழுத்தாளர் ஸ்டான் லீ இன்று (நவம்பர் 13) காலமானார். அவருக்கு வயது 95.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கத் தூண்டும் கதாபாத்திரங்களாக ஸ்பைடர் மேன், அயர் மேன், தி ஹல்க் போன்ற படங்கள் ஹாலிவுட்டில் இருந்து வருகின்றன. மார்வெல் சூப்பர் ஹீரோஸ் என்று அழைக்கப்படும் இந்த கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றை நேர்த்தியான திரைப்படங்களாக்கி வெற்றிகரமாக உலகெங்கும் பரவச் செய்ததில் ஸ்டான் லீ-யை பிதாமகன் எனச் சொல்லலாம்.
கடந்த 1960களில் சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களை கற்பனை வளத்துடன் எழுதத் தொடங்கியவர் ஸ்டான் லீ. அதன்பின் ஜேக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ ஆகியோருடன் இணைந்து உலக ரசிகர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதியவகை கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றைத் திரைப்படங்களாக்கினார். ஸ்டான் லீ-யின் மறைவு, ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்டான் லீ மறைவு குறித்து அவரின் மகள் ஜே.சி. லீ கூறுகையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்குங்கள் என்று தொடர்ந்து என் தந்தைக்கு அவரின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தவாறு இருந்தனர். என் தந்தை தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார், தான் செய்த செயல்களை நேசித்தார். குடும்பமே அவரை மிகவும் விரும்பியது, அன்பு செலுத்தியது. அவரின் ரசிகர்கள் அவர்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். அவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்தார்.
ஆனால், ஸ்டான் லீ மறைவுக்கான காரணம் என்ன என்பதை அவரின் மகள் நிருபர்களிடம் தெரிவிக்கவில்லை. டிஎம்இசட் நியூஸ் வெளியிட்ட செய்தியில், இன்று அதிகாலை ஸ்டான் லீ-யின் இல்லமான ஹாலிவுட் ஹில்ஸுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸ், சீடர்ஸ் சினாஸ் மருத்துவமனைக்குச் சென்றது. ஸ்டான் லீ காலமாகிவிட்டதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது என்று தெரிவித்தது.
அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை, தங்களுக்குப் பிடித்தமான, ஆதர்ச சூப்பர் ஹீரோக்களை ஸ்டான் லீ எழுதுவதற்கு முன்பிருந்தே மனதில் வைத்திருந்தனர். குறிப்பாக, 1938-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் மேன் துப்பறிவாளன் கதைகள், சூப்பர் மேன் போன்ற கதாபாத்திரங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருந்தனர். ஆனால், ஸ்டான் லீ கதை எழுதத் தொடங்கியபின், ஸ்பைடர் மேன், தி ஹல்க், அயர்ன் மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் பதியத் தொடங்கின.
ஸ்டான் லீ உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரங்கள், சூப்பர் ஹீரோக்கள் சாதாரண கற்களால், பொம்மைகளாக உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்கப்பட்டு இருந்தால், நிச்சயம் மக்கள் ரசித்திருக்க மாட்டார்கள். லீ உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு உயிர் இருந்தது, மனிதநேயம் இருந்தது, உணர்ச்சிகள் இருந்தன. இவைகளைக் கொண்டு அந்த கதாபாத்திரங்களை லீ உருவாக்கியதால்தான் மக்கள் ஸ்பைடர் மேன், தி ஹல்க், அயர்ன் மேன் போன்ற பிரபலமான ஹீரோ பாத்திரங்களுடன் நெருக்கமாக இருந்தனர்.
ஸ்டான் லீ தனது எழுத்துகள் மூலம் கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், அதை கம்ப்யூட்டர் மூலம் வடிவமைத்தலிலும் முக்கியப் பங்காற்றினார். தனது கற்பனை ஹீரோ எப்படி வரவேண்டும், உருவத்தில் யாராக இருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு உருவாக்கி, அதை மக்களிடத்தில் பிரபலமடையச் செய்தார்.
அதில் முக்கியமானது, இளம்வயதில் இருக்கும் ஸ்பைடர் மேன், முறுக்கேறிய உடலுடன், பிரமிக்கும் தோற்றத்தில் இருக்கும் தி ஹல்க், மனிதர்களோடு தொடர்பில்லாத தி எக்ஸ் மேன், பென்டாஸ்டிக் ஃபோர், பிளாக் பேந்தர், டேர்டெவில், ஆன்ட் மேன், ஹீ மேன் ஆகியவை லீ உருவாக்கியதாகும்.
12-க்கும் மேற்பட்ட மார்வெல் திரைப்படங்களில் உருவான கற்பனைக் கதாபாத்திரங்கள், ஸ்டான் லீ-யால் உருவாக்கப்பட்டவை. ஸ்டான் லீ உருவாக்கிய கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலானவை ஹாலிவுட் மட்டுமின்றி, உலகளவில் சக்கைபோடு போட்டு, வசூலை வாரிக் குவித்தவை. அதிலும் இவர் உருவாக்கிய ஸ்பைடர் மேன் கதாபாத்திரம், உலக ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு, அடிமைக்களாக்கியது.
கடந்த 2008-ம்ஆண்டு அமெரிக்க அரசின் மிக உயரிய விருதான நேஷனல் மெடல் ஆஃப் ஆர்ட்ஸ் விருதை ஸ்டான் லீ பெற்றார்.
வாழ்க்கை வரலாறு
கடந்த 1922-ம்ஆண்டு, டிசம்பர் 28-ம் தேதி நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஸ்டான்லி மார்டின் லீபெர். இவரின் தந்தை ரோமானிய நாட்டைச் சேர்ந்த யூதர் ஆவார். லீ தனது 17 வயதிலேயே கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கி எழுதத் தொடங்கினார்.
கடந்த 1947-ம் ஆண்டு ஜோன் க்ளேடான் போகாக் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் ஸ்டான் லீ. ஸ்டான் லீ - போகாக் தம்பதிக்கு இரு மகள்கள் பிறந்தநிலையில், அதில் ஒருவர் இறந்துவிட்டார். 2012-ம் ஆண்டு ஸ்டான் லீ-க்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. ஸ்டான் லீ-யின் மனைவி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி காலமானார். அதன்பின் தனது மகளுடன் ஸ்டான் லீ வசித்துவந்தார். தனது மகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று கடந்த ஏப்ரல் மாதம் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.