

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் (84) உடல் நலக்குறைவால் காலமானார்.
ஹாலிவுட்டில் வெளியான காமெடி படமான, ‘அனா’, ‘கோல்டு பீட்’, ஹாரர் படமான ‘த ஹாண்டட்’, ஃபேன்டஸி படமான `புரூஸ் அல்மைட்டி' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சாலி கிர்க்லேண்ட். `அனா' படத்தில் இவர் நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு அப்படம் பரிந்துரைக்கப் பட்டது. ஆனால் அவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
60 ஆண்டுக்கும் மேலாக நடித்து வந்த அவர், சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த அக்டோபர் மாதம் கீழே விழுந்ததில் அவருடைய விலா எலும்புகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.