

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூன் லாக்ஹார்ட், தனது 100-வது வயதில் காலமானார்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் தம்பதியான ஜீன் மற்றும் கேத்லீன் லாக் ஹார்ட்டின் மகளான ஜூன் லாக்ஹார்ட், தனது 8-வது வயதிலேயே நடிக்கத் தொடங்கினார்.
1938-ம் ஆண்டு வெளியான ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’ திரைப்படத்தில் தனது பெற்றோருடன் இணைந்து நடித்தார். பின்னர், ‘மீட் மீ இன் செயின்ட் லூயிஸ்’ (1944), ‘சார்ஜெண்ட் யார்க்’ (1941), ‘ஆல் திஸ் அண்ட் ஹெவன் டூ’ (1940), ‘தி இயர்லிங்’ (1946) உள்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
‘லாஸ்ட் இன் ஸ்பேஸ்’ என்ற தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பு, பல விண்வெளி வீரர்களுக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறி, 2013-ம் ஆண்டு நாசா அமைப்பு சாதனைப் பதக்கம் வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு காரணமாக தனது 100-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.