Mission Impossible: Fallout - விமர்சனம்

Mission Impossible: Fallout - விமர்சனம்
Updated on
2 min read

கடந்த பாகத்தில் நாயகன் ஈதன் ஹன்ட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சாலமன் லேன் என்பவரின் ’சிண்டிகேட்’ என்னும் இயக்கம் தற்போது ‘apostles’ என்ற பெயரில் தீவிரவாத இயக்கமாக மாறிச் செயல்பட்டு வருகிறது

லண்டனில் இருக்கும் ஈதன் ஹன்ட்டுக்கு ஒருநாள் ரகசியல்த் தகவல் ஒன்று கிடைக்கிறது. அதில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 3 புளூட்டோனிய உலோகங்களைப் பற்றியும், அதை வாங்குபவர்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களின் படி தனது சகாக்களான பென்ஜி, லூதர் ஆகியோருடன் பெர்லின் செல்லும் ஹன்ட், அங்கு நடக்கும் சண்டையில் புளூட்டோனியம் உலோகங்களை apostles தீவிரவாதிகளிடம் கோட்டை விட்டு விடுகிறார்.

பின்னர்  apostles இயக்கத்தோடு தொடர்புடைய அணு ஆயுதங்கள் நிபுணர் ஒருவரை பிடித்து அவரிடம் apostles இயக்கத்தின் அடுத்தகட்ட திட்டத்தை அறிகிறார் ஈதன் ஹன்ட்.

apostles தீவிரவாதிகளிடமிருந்து  3 புளூட்டோனிய உலோகங்களையும் வாங்கவிருக்கும் ஜான் லார்க் என்பவரைப் பிடிக்க ஈதன் ஹன்ட் குழு பாரீஸ் கிளம்புகிறது. ஏற்கெனவே ஒரு முறை கோட்டை விட்டுவிட்டதால் அவர்களைக் கண்காணிக்க சிஐஏ ஏஜென்டான ஆகஸ்ட் வாக்கரும் அவர்களோடு செல்கிறார்.

பிறகு அங்கு அங்கு நடக்கும் சண்டையில் லார்க் கொல்லப்பட, ஆயுத வியாபாரிகளிடம் ஈதன் ஹன்ட் தன்னை லார்க் என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

புளூட்டோனியத்தைக் கொடுக்க வேண்டுமானால் கடந்த பாகத்தில் கைது செய்யப்பட்ட சாலமன் லேனை போலீஸிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈதன் ஹன்ட்டுக்கு நிபந்தனை விடுக்கப்படுகிறது.

சாலமன் லேன் விடுவிக்கப்பட்டாரா? 3 புளூட்டோனியம் உலோகங்களும் ஈதன் ஹன்ட்டால் மீட்கப்பட்டதா? ஜான் லார்க் யார்? என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளோடு பதில் சொல்கிறது படம்.

மிஷன் இம்பாஸிபிள் வரிசையில் வெளியாகும் ஆறாவது படம் இது. நாயகன் ஈதன் ஹன்ட்டாக அதே டாம் க்ரூஸ். மனிதருக்கு வயதே ஆகாது போலும். ஆக்‌ஷன், எமோஷனல் காட்சிகளில் எல்லாம் வழக்கம் போல கலக்குகிறார்.

வில்லனாக ஹென்றி கெவில் (அட.. நம்ம சூப்பர்மேன்தாங்க). படம் தொடங்கி இறுதி வரை ஆடியன்ஸை ஒருவித பரபரப்புக்குள்ளாகவே இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை.

சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் சேஸிங் காட்சிகள். (மிஷன் இம்பாஸிபிள் வரிசையில் அதிக சேஸிங் காட்சிகளைக் கொண்ட படமும் இதுவே)

படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் அந்த பாத்ரூம் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் குறை என்று பார்த்தால் முந்தைய பாகங்கள் போல் புத்திசாலித்தனமாக ஏமாற்றித் திருடும் காட்சிகள் இதில் இல்லை. அனைத்துமே நேரடி ஆக்‌ஷன் காட்சிகள்தான். அதையும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அமைத்திருக்கிறார் இயக்குனர்  Christopher McQuarrie.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in