நெற்றி குங்குமம், பிரதமர் மோடி நெக்லஸ்... கேன்ஸ் திரைப்பட விழாவில் தேசப்பற்றோடு மிளிர்ந்த நடிகைகள்! 

நெற்றி குங்குமம், பிரதமர் மோடி நெக்லஸ்... கேன்ஸ் திரைப்பட விழாவில் தேசப்பற்றோடு மிளிர்ந்த நடிகைகள்! 
Updated on
1 min read

பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நினைவுகூறும் வகையிலான உடை அலங்காரங்களுடன் வந்திருந்தது கவனம் பெற்றது.

மே 13 அன்று கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியதிலிருந்து, 'கேன்ஸ் ராணி' ஐஸ்வர்யா ராய் பச்சன் வருகைக்காக உலகம் ஆவலுடன் காத்திருந்தது. அவரின் வருகைக்குக்கு பின்னர் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

மணீஷ் மல்ஹோத்ரா தந்த பனாரசி சேலையில் வந்திருந்த ஐஸ்வர்யா ராய், நெற்றி குங்குமம் (சிந்தூர்) அணிந்து வந்ததற்காக அவர் பெரும் பாராட்டை பெற்றுள்ளார். சிவப்பு கம்பளத்தில் தனது திருமண பந்தத்தின் சின்னமான குங்குமத்தை துணிச்சலுடன் அணிந்ததன் மூலம் கணவர் அபிஷேக் பச்சனுடனான விவாகரத்து வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதே நேரத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவின் சமீபத்திய ‘ஆபரேஷன் சிந்தூரை’ நினைவு கூறும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ந்துபோனார்கள். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்திய ராணுவத்தின் முயற்சிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது அமைந்திருப்பதாக ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர். "உலக அரங்கில் 'ஆபரேஷன் சிந்தூரை' நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதற்கான சான்று இதுதான். ட்வீட்கள் இல்லை, அறிக்கைகள் இல்லை, பதாகைகள் இல்லை. உங்கள் செயல், வார்த்தைகளை விட சத்தமாகப் பேசுகின்றன” என ஒருவர் இணையத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிதி ராவ் ஹைதாரி கேன்ஸ் விழாவில் நீல நிற பார்டருடன் கூடிய சிவப்பு நிற புடவையில் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) அணிந்திருந்தார். ரசிகர்கள் அவரது தோற்றத்தை வெகுவாக பாராட்டினர்.

இதற்கிடையில், நடிகை சோனம் சாப்ரா இந்தியா மீதான் நான்கு தாக்குதல் தேதிகளை சித்தரிக்கும் வகையிலான கவுனை அணிந்திருந்தார். அதில் '2008 - மும்பை, 2016 - உரி, 2019 - புல்வாமா, மற்றும் 2025 - பஹல்கம்' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த செயலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

மேலும், வளர்ந்து வரும் நடிகை மற்றும் மாடலான ருச்சி குஜ்ஜர், முழு மணமகள் அவதாரத்தில், ராஜஸ்தானி ரெஜாலியா அலங்காரத்தில், பாரம்பரிய குந்தன் நகைகளை அணிந்திருந்தார். அவர் அணிந்த நெக்லஸில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் இடம்பெற்றிருந்தன. முத்துக்கள் மற்றும் சிவப்பு எனாமல் தாமரைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் உருவப்படம் அந்த நெக்லஸில் இடம்பெற்றிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in