சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு குறித்த காட்சிகள்: ஆஸ்கருக்கு சென்ற ‘சந்தோஷ்’ படத்துக்கு இந்தியாவில் தடை

சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு குறித்த காட்சிகள்: ஆஸ்கருக்கு சென்ற ‘சந்தோஷ்’ படத்துக்கு இந்தியாவில் தடை
Updated on
1 min read

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம், ‘சந்தோஷ்'. இந்தப் படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. பல்வேறு விருது விழாக்களில் கலந்துகொண்ட இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட தணிக்கை வாரியம் இந்தியாவில் வெளியிடத் தடை விதித்தது.

இதில் உள்ள கருத்துகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் சில காட்சிகள், வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியதை, படக்குழு ஏற்க மறுத்து விட்டது. கணவன் இறந்த பிறகு காவல் பணியில் சேரும் வட இந்திய பெண்ணின் கதையைக் கொண்ட இந்தப் படத்தில், அங்கு நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தடை குறித்து படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஷஹானா கோஸ்வாமி கூறுகையில், “இது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. படம் எடுக்கப்பட்ட நாட்டில் உள்ள ஆடியன்ஸ் இதை பார்க்கமுடியாமல் போனது வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கூட திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்ட ‘சந்தோஷ்’ திரைப்படத்துக்கு இந்த நிலை என்பது கூடுதல் துரதிர்ஷ்டம். படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனது அவமானகரமானது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in