

கிறிஸ்டோபர் நோலன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை படம், ‘இன்டர்ஸ்டெல்லர்’. மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்த இந்தப் படம் உலகம் பெரும் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. சயின்ஸ் பிக்ஷன் படங்களின் பாணியை முற்றிலுமாக மாற்றி ஒரு புதிய பாதையை திறந்த இந்த படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. உலகம் முழுவதும் 681 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவானதைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு டிச.6-ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. ஆனால், இந்தியாவில் ‘புஷ்பா 2’ காரணமாக ஐமேக்ஸ் உட்பட போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, இந்தப் படம் இந்தியாவில் கடந்த பிப்.7-ம் தேதி வெளியானது.
இப்படத்தை பெரிய திரையில் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் சென்று கண்டு ரசித்தனர். இந்த நிலையில் இப்படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் ரூ.2.40 கோடி வசூலித்தது. சனிக்கிழமை 3.25 கோடியும், ஞாயிற்றுக் கிழமை 3.25+ கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.9 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் செய்துள்ளது. 2014ஆம் ஆண்டு வெளியான போது இந்தியாவில் வசூலித்த தொகையுடன் சேர்த்து இப்படம் இந்தியாவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
7 நாட்கள் மட்டுமே இப்படம் இந்தியாவில் திரையிடப்படுகிறது. 7 நாள் முடிவில் மொத்தம் இப்படம் ரூ.15 கோடி வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.