கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு: தன்னைத்தானே இரும்புக் கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு: தன்னைத்தானே இரும்புக் கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்
Updated on
1 min read

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னைத்தானே இரும்புக் கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் அடைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய இந்த விழா, வருகிற 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து நடிகர் - நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

71-வது வருடமாக நடைபெற்றுவரும் இந்த விழாவில், பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, சோனம் கபூர் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் ரெட் கார்ப்பெட்டில் அணிவகுத்தனர். பாலிவுட் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் சீனப் படங்களிலும் நடித்துவரும் மல்லிகா ஷெராவத்தும் ரெட் கார்ப்பெட்டில் நடை பயின்றார்.

குழந்தை கடத்தல் மற்றும் அவர்கள் மீதான பாலியல் சுரண்டலுக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உலக அளவிலான பிராண்ட் அம்பாஸிடராக இருக்கும் மல்லிகா ஷெராவத், அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் ஒரு விஷயத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் செய்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும் இடத்தில், தன்னைத்தானே ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைத்துக் கொண்டுள்ளார்.

“கேன்ஸ் திரைப்பட விழாவில் நான் கலந்து கொள்வது இது 9-வது வருடம். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இது மிகச்சிறந்த இடம் என நினைக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் எங்காவது ஒரு பெண் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இதில், இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே, என்னால் முடிந்த அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.

அவர் திடீரென இரும்புக் கூண்டுக்குள் தன்னை அடைத்துக் கொண்ட சம்பவத்தால் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டாலும், அவரின் நல்ல உள்ளத்தைத் தெரிந்துகொண்டு அங்குள்ளவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in