

சென்னை: 90’ஸ் கிட்ஸின் விருப்பமான அனிமேஷன் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக கூறி, எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் பலரும், கார்ட்டூன் நெட்வொர்க் சேனலுடனான தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
1990-களில் சிறுவர்களாக இருந்தவர்களின் விருப்பமான பொழுதுபோக்கு சேனல் கார்ட்டூன் நெட்வொர்க். அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த சேனல் வார்னர் பிரதர்ஸுக்கு சொந்தமானது. ஸ்கூபி-டூ (Scooby-Do) முதல் டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry) வரை இந்த சேனலின் அனிமேஷன் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், இன்று திடீரென எக்ஸ் தளத்தில், #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. மேலும், கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக தகவல் வெளியானது. பலரும் தங்கள் நாஸ்டால்ஜி அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் காரணம் என்ன? - அனிமேஷன் தொழிலாளர்களின் குழு சார்பில் ‘Animation Workers Ignited’ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு ஒன்று இயக்கி வருகிறது. அதில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கார்ட்டூன் நெட்வொர்க் நிறுத்தப்படுகிறதா? அனிமேஷன் துறை என்ன மாதிரியான ஆபத்தை சந்தித்து வருகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். #RIPCartoonNetwork” என்ற ஹேஷ்டேக்கின் வழியே உங்களுக்கு பிடித்தமான கார்ட்டூனை பதிவிடுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனிமேஷன் தொழிலாளர்கள் வேலை இழப்பு: மேலும், அதில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கார்ட்டூன் நெட்வொர்க் மூடும் நிலையில் உள்ளது. மற்ற பெரிய அனிமேஷன் ஸ்டூடியோக்களும் இதிலிருந்து தப்பவில்லை. அனிமேஷன் பணியாளர்களுக்கு என்ன தான் ஆனது? தரவுகளின் அடிப்படையில் பலரும் பணியில்லாமல் தவிக்கின்றனர். கரோனாவுக்குப் பிறகு சமாளித்த போதிலும், கடந்த ஓராண்டாக பலருக்கும் வேலையில்லாத சூழல் உருவாகியுள்ளது. கரோனா பரவலின்போதும் தடையின்றி இயங்கிய ஒரே பொழுதுபோக்கு தளம்.
ஆனால், பெரும்பாலான ஸ்டூடியோக்களை ப்ராஜெக்டுகளை ரத்து செய்து, அவுட் சோர்சிங் வேலைகளை அதிகப்படுத்தி, அனிமேஷன் கலைஞர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர். பெரிய ஸ்டூடியோக்கள் பணியாளர்களை நீக்கி, செலவினங்களை குறைத்து தங்கள் நிதிநிலையை மேம்படுத்தும் முனைப்பில் உள்ளன.
பார்வையாளர்கள் #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்த கார்ட்டூன்நெட்வொர்க் நிகழ்ச்சிகளை பதிவிடுங்கள். அனிமேஷன் துறை தற்போது பாதிப்பில் உள்ளது. நீங்கள் எந்த பக்கம்” என்ற வசனங்களை இரண்டு கார்டூன் கதாபாத்திரங்கள் பேசும் வகையில் அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக எக்ஸ் தள பக்கத்தில் பலரும் தங்களுக்கு பிடித்தமான கார்ட்டூன் நெட்வொர்க் நிகழ்ச்சிகளையும் நாஸ்டால்ஜியையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், மூடல் தொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை இல்லை என்பது கவனிக்கத்தக்கது.