Last Updated : 24 May, 2024 04:36 PM

 

Published : 24 May 2024 04:36 PM
Last Updated : 24 May 2024 04:36 PM

Furiosa: A Mad Max Saga - விமர்சனம்: மிரட்டும் மேக்கிங், ஆக்‌ஷன்... ஆனால் திரைக்கதை?

1979-ஆம் ஆண்டு இயக்குநர் ஜார்ஜ் மில்லரின் சிந்தனையில் உதித்த மேட் மேக்ஸ் படவரிசை. பல்வேறு பாகங்களைக் கண்ட இந்த சீரிஸ் இன்று 45 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களுக்கு அட்டகாசமான விஷுவல் ட்ரீட் ஆக ‘ஃப்யூரியோசா: எ மேட் மேக்ஸ் சாகா’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு 2015-ஆம் ஆண்டு வெளியான ‘மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்ற ஃப்யூரியோசாவின் தோற்றம் குறித்து இப்படம் பேசுகிறது. எதிர்காலத்தில் உலகமே தண்ணீர் இன்றி, வளம் குன்றி கற்காலம் போல மாறியிருக்கிறது. எஞ்சியிருக்கும் சிறிதளவு எண்ணெய் வளத்தை சில கூட்டத்தினர் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ஏதோ ஓர் இடத்தில் ரகசியமாய் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய பசுமை சோலையில் சில மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருத்தி 10 வயதாகும் ஃப்யூரியோசா. டிமன்டஸ் (க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்) என்பவனின் கூட்டத்தினரின் கண்ணில் அந்த சோலை படுகிறது. ஃப்யூரியோசாவை கடத்திச் செல்லும் அவர்களுடனான சண்டையில் ஃப்யூரியோசாவின் தாய் உயிரிழக்கிறார்.

டிமன்டஸின் கட்டுப்பாட்டில் சில நாட்கள் இருக்கும் ஃப்யூரியோசா, அதன் பிறகு முந்தைய பாகத்தின் வில்லனான இம்மார்ட்டான் ஜோவின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கும் அவர், எப்படி ஒரு முழுமையான போராளியாக மாறினார் என்பதே இப்படம் சொல்லும் கதை.

இதன் முந்தைய பாகமான ‘மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட்’ ரோட் - ஆக்‌ஷன் படங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம். தொடக்கம் முதல் இறுதி ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரைக்கதை, அழுத்தமான பாத்திரப் படைப்புகள் என எல்லா வகையிலும் சிறந்த படைப்பாக அப்படம் இருந்தது.

ஆனால், அப்படத்தில் பேசப்பட்ட ஃப்யூரியோசா கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஃப்யூரியோசா: எ மேட் மேக்ஸ் சாகா’ படம் திரைக்கதையில் ஜொலிக்க தவறுகிறது. காரணம், முந்தைய படத்தின் ஹீரோவான டாம் ஹார்டியை விட ஃப்யூரியோசா கதாபாத்திரத்தில் நடித்த சார்லிஸ் தெரோனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால். இந்த கதை முழுக்க முழுக்க ஃப்யூரியோசாவையே சுற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளை தவிர சொல்லிக் கொள்ளும்படி எமோஷனல் அம்சங்களோ, குறிப்பிடும்படியான அழுத்தமான காட்சிகளோ இல்லாதது பெரும் குறை.

தொடக்கத்தில் ஃப்யூரியோசா கடத்தப்படும் காட்சியைத் தொடர்ந்து வரும் சேஸிங் காட்சியே பெரும் சலிப்பை உண்டாக்கி விடுகிறது. வெறும் துரத்தல், துரத்தல், துரத்தல் மட்டுமே. அதைத் தொடர்ந்து வெறும் வசனங்களால் மட்டுமே நகர்கிறது படம். அதன் பிறகு க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் காட்சிகளின் வசனங்கள் ஈர்க்கின்றன. ஆனால் மேட் மேக்ஸ் படங்களின் எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் கட்டிப் போடும் விறுவிறுப்பான திரைக்கதை இதில் முற்றிலுமாக மிஸ்ஸிங் என்றே சொல்லலாம்.

சிறுவயது ஃப்யூரியோசாவாக அலைலா ப்ரவுன், வளர்ந்த ஃப்யூரியோசாவாக ஆன்யா டைலர் ஜாய் இருவருமே சீரியசான நடிப்பை கொடுத்து ஈர்க்கின்றனர். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் ஆன்யா டைலர் ஜோவிடம் இருந்து வெளிப்படும் எனர்ஜி வியக்க வைக்கிறது. ஆனால் அவர் மொத்த படத்திலும் ஒரு மணி நேரம் மட்டுமே வருவது ஏமாற்றம்.

படத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் வரும் காட்சிகள் அனைத்தும் லேசான புன்னகையை கொண்டு வருகின்றன. அந்தளவுக்கு நகைச்சுவை கலந்து வில்லத்தனமான கதாபாத்திரம். அவர் பேசும் வசனங்களும் ஈர்க்கின்றன. முந்தைய பாகத்தில் வந்த இம்மார்ட்டான் ஜோவுக்கு இதில் பெரிதாக வேலை இல்லை.

முதல் பாதியின் இறுதியில் வரும் பாலைவன சேஸிங் காட்சி படமாக்கப்பட்ட விதம் அக்மார்க் மேட் மேக்ஸ் ட்ரேட்மார்க். பெரிய திரையில் நிச்சயம் கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 20 நிமிடம் அளவுக்கு நீடிக்கும் அந்த காட்சி மிரட்டல் அனுபவம்.

சிஜி, விசுவல் எஃபெக்ட்ஸ், மேக்கிங் என தொழில்நுட்பரீதியான விஷயங்களில் குறை சொல்ல ஏதுமில்லை. முந்தைய படங்களின் இருந்த அதே மனநிலையை இதிலும் தொழில்நுட்பக்குழுவினர் சிறப்பாக தக்கவைத்துள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகளில் இருந்த நேர்த்தி திரைக்கதையில் இருந்திருந்தால் ‘மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட்’ கொடுத்த அனுபவத்தை இந்த படமும் அப்படியே கொடுத்திருக்கும். ஆனால் ஜெட் வேக திரைக்கதையையும், விறுவிறுப்பான காட்சிகளையும் எதிர்பார்த்து வரும் மேட் மேக்ஸ் சீரிஸ் ரசிகர்களை ஏமாற்றி திருப்பி அனுப்புகிறார் ‘ஃப்யூரியோசா’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x