ஹாலிவுட் நடிகையின் பங்களாவில் தீ விபத்து

ஹாலிவுட் நடிகையின் பங்களாவில் தீ விபத்து
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை காரா டெலோவீன். இவர் அன்னா கரினினா, தி ஃபேஸ் ஆப் அன் ஏஞ்சல், சூசைட் குவாட், லண்டன் ஃபீல்ட்ஸ், மிஸ் அமெரிக்கானா என பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டூடியோ சிட்டியில் எட்டாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட பங்களா இருக்கிறது. இதில் நேற்று முன் தினம் திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்து 13 வண்டிகளில் வந்த 94 தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த போது நடிகை காரா, பங்களாவில் இல்லை. அவர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார்.

இந்த விபத்தில் பங்களாவின் சில பகுதிகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை காரா டெலோவீன், “என்னால் நம்ப முடியவில்லை. இதைக் கேள்விப்பட்டதும் என் இதயம் நொறுங்கிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் வாழ்க்கை மாறிவிடும். அதனால் உங்களிடம் இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in